×

கீழடி அருகே முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

*பழங்கால தமிழரின் கட்டிடமா?

திருப்புவனம் : கீழடி அருகே அகரத்தில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் கொண்ட சுவர் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடியில் மட்டும்தான் இரட்டைச்சுவர், செங்கல் கட்டுமானம், கால்வாய் போன்றவை, அகரத்தில் உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. தற்போது அகரத்தில் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் கிடைத்த செங்கல் நீளம், அகலம் கொண்டதாக இருந்தது. ஆனால் அகரத்தில் செங்கற்கள் சதுர வடிவில் உள்ளன. இவை கீழடியில் பயன்படுத்திய செங்கற்களுக்கு அடுத்த காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என தெரிகிறது. மூன்று வரிசையாக செங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து கட்டிடம் கட்டியுள்ளனர். பிடிமானத்திற்காக வழுவழுப்பான களிமண் பயன்படுத்தியுள்ளனர். அருகிலேயே சிதைந்த நிலையில் சில செங்கற்கள் குவியலாக கிடைத்துள்ளன.

அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் உறைகிணறு கண்டறியப்பட்ட குழிக்கு அருகிலேயே செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. உறைகிணறு கண்டறியப்பட்ட குழியிலும் ஒரு சுவர் தென்பட்ட நிலையில் இரண்டும் சேர்ந்து கட்டிட வடிவில் இருக்க வாய்ப்புள்ளது. இது ஒரு தரைத்தள கட்டிடமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 4 அடி ஆழத்திற்கு மட்டும் அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. அதில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சுவர் கிடைத்துள்ளது. மேலும் அகழாய்வு செய்த பின்னர்தான் சுவரின் முழு வடிவமும் தெரியவரும் என அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Wadi , Thirupuvanam,Keeladi, 3 row Wall
× RELATED வேளாண் விளைபொருட்களுக்கான...